Nagaraja Cholan MA, MLA
Production :- S. Ravichandran and K. Suresh
Director :- Manivannan
Music :- James Vasanthan
Actors :- Sathyaraj,Mithra,Manivannan, Seeman

 

 

 

 

முந்தைய அமைதிப்படையின் தொடர்ச்சி. அமாவாசையாக இருந்து அரசியல்வாதியாக வளர்ந்த சத்யராஜ், இதில் முதலமைச்சராகி எல்லா அட்டகாசமும் செய்து தன் மகனாலேயே சிறைக்கு அனுப்பப்பட்டு மீண்டும் அமாவாசை ஆகிறார். அரசியலில் கோஷ்டி வளர்த்து துணை முதல்வராகி, பின்பு முதல்வராகும் சத்யராஜ் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு நம் காட்டு வளத்தை விற்க முயற்சிக்கிறார். இதற்காக கொலை, 

ஆள்கடத்தல் வரை இறங்கி வேலை செய்கிறார். இதை அந்த மலையில் வாழும் மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு தலைமை தாங்கி போராடுகிறார் சீமான். இந்த நிலையில் காட்டுக்குள் நடப்பதை அறிய சி.பி.ஐ அதிகாரியாக வருகிறார் இன்னொரு சத்யராஜ். அதிகார பலம், பண பலம், ஆள் பலத்துக்கு முன்னால் நேர்மையான போலீஸ் அதிகாரியும், போராடும் மக்களும் ஜெயிக்கிறார்களா என்பது கதை.

சத்யராஜையும், தனது அரசியல் கிண்டலையும் நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன், அரசியல்வாதி சத்யராஜின் சில லொள்ளுகளும், அவ்வப்போது கலகலப்பூட்டும் அரசியல் நைய்யாண்டிகளும் படத்தை பலமாக தூக்கி நிறுத்தினாலும் மற்ற எல்லாமே அதை குபுக்கென குப்புற தள்ளிவிடுகிறது. சத்யராஜுக்கு அராஜக அரசியல்வாதி கேரக்டர் புதிதில்லை என்பதால் அம்சமாக ஊதி தள்ளிவிடுகிறார். ஆனால் போலீஸ் அதிகாரி கேரக்டரில் உடம்பில் இருக்கும் மிடுக்கு முகத்தில் மிஸ்சிங். அவர் ஆவேச வசனம் பேசுகிறார். திடீரென ராஜினாமா செய்கிறார். அடுத்த காட்சியில் அரசியல்வாதி சத்யராஜை கைது பண்ணுகிறார். 

முன்று உயரதிகாரிகள் நடுரோட்டில் கொல்லப்படுகிறார்கள். அனாதை பிணங்களாக கிடக்கும் அவர்களை அடக்கம் செய்ய, சீமான் மக்களை வீராவேசமாக அழைக்கிறார். சொந்த மருமகளை கொல்ல அடியாளுக்கு சத்யராஜ் உத்தரவு போடுகிறார்.  சத்யராஜின் ஆசை நாயகி திடீரென திருந்தி அவருக்கு எதிராக கிளம்புகிறார் என்று காடு மலையென கடக்கிறது கதை.

படத்தின் ஒரே பலம் மணிவண்ணன்தான். என்ன மணி என்று சத்யராஜ் அழைக்க, ங்கணா என்று பம்மும் மணிவண்ணன் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்கு கியாரண்டி. கும்கிக்கான விளக்கம், பதினேழு எம்.எல்.ஏவை வச்சுக்கிட்டா சட்டசபையில இப்படி பேசினே? என்று எம்.எஸ்.பாஸ்கரை கலாய்ப்பது, உட்பட பல இடங்களில் நடப்பு அரசியலை நக்கலாக நடமாட விட்டிருக்கிறார். வர்ஷா, மிருதுளா உட்பட படத்தில் ஏகப்பட்ட ஹீரோயின்கள். 

யாருக்குமே முழுமையான வாய்ப்பில்லை. சீமான் கேரக்டர் அவருக்காக உருவாக்கப்பட்டு திணிக்கப்பட்டிருப்பதால் ஈர்க்கவில்லை. பொதுமேடைகளில் பேசுவது போலவே வசனத்தையும் பேசுகிறார். படத்தின் பின்னணி இசையில் அவ்வளவு தடுமாற்றம். பாடல்கள் பரவாயில்லை ரகம். அந்தக் கால அமைதிப்படை பார்க்காதவர்கள், இதைப் பார்த்து ஆறுதல் அடையலாம். பார்த்தவர்கள், அதில் இருந்த பவர் இதில் இல்லை என்று நினைக்கலாம். இது சிரிப்பு படங் களின் சீசன் என்பதால் கொஞ்சம் சிரித்து விட்டு வரலாம்.

 

 

 

 

Download Nagaraja Cholan MA, MLA  MP3 Songs