Alex Pandian
Production :- Studio Green
Director :- Suraj
Music :- Devi Sri Prasad
Actors :- Karthi,Anushka Shetty,Santhanam,Suman,Milind Soman

என்னை தேடிக்கிட்டு இந்த பக்கம் அஞ்சாறு சுமோ வருது. அந்தப்பக்கம் ஆறேழு ஸ்கார்பியோ வருது என்று நெஞ்சு நிமிர்த்தும் கார்த்தியிடம், ஏண்டா ஒங்க வீட்ல இருந்து யாரும் தேடிகிட்டு வரமாட்டாங்களா என்கிறார் சந்தானம். வாஸ்தவம்... இந்த கார்த்திக்கு ஊரென்ன, பேரென்ன, உறவென்ன, வரவென்ன? இப்படி, ஒன்றுக்கும் அவசியமில்லாத ஓப்பனிங்.

முதல் காட்சியிலேயே அனுஷ்காவை சுமார் நூறு தடியன்கள் துரத்த, அத்தனை பேரையும் விட வேகமாக ஓடிவரும் அனுஷ்கா ரயிலின் கடைசி பெட்டியில் ஏறி தப்பிக்கிறார். ஆனால் அதே ரயிலை நாலாபுறத்திலிருந்தும் தாக்குகிறார்கள் வில்லன்கள். அத்தனை பேரையும் அப்பளம் போல நொறுக்கிவிட்டு அக்கடா என்று ரெஸ்ட் எடுக்க நினைத்தால் வான்வழி தாக்குதல் நடத்துகிறார் வில்லன் மிலிந்த் சோமன். வேறு வழியில்லாமல் அனுஷ்காவையும் சேர்த்து பிடித்துக் கொண்டு தண்ணீரில் குதிக்கும் கார்த்தி கண்விழித்து ஒரு கட்டத்தில் தன் பிளாஷ்பேக்கை அவிழ்க்க, ஆறாக ஓடுகிறது வன்முறையும் வக்கிரமும்.

படத்தின் பெரும்பாலான நேரங்களில் இவரது பின்புறத்தில் சேதாரம் ஏற்பட, தான் பெற்ற துன்பத்தை இவ் வையகத்திற்கும் தருகிறார் மனுஷன். போகட்டும்... இப்படத்தில் கதை என்ற ஒன்று இருக்கிறதே, அதைப்பற்றி?


ம்ம்ம்... அமெரிக்காவிலிருந்து ஒரு கப்பல் நிறைய மருந்துகளை எடுத்து வருகிறார் மிலிந்த் சோமன். அதை தமிழ்நாட்டு ஆஸ்பத்திரி மருத்துவமனைகளில் விற்பதாக ஏற்பாடு. ஆனால் அதற்கு அனுமதி தரவேண்டிய முதலமைச்சர் விசு, முடியாது. இது மக்களுக்கு சைட் எபெக்ட் வரவழைக்கிற மருந்து. அமெரிக்காவிலேயே இதற்கு தடை என்றெல்லாம் நேர்மை பேசுகிறார்.

விசுவை சம்மதிக்க வைக்க வேண்டுமென்றால் அவரது மகளை கடத்தி வைத்தால் நடக்கும் என்று அவருக்கு அடுத்தகட்டத்திலிருக்கும் அதிகாரிகளும், ஒரு சாமியாரும் திட்டமிட, கடத்தல் காரராக வந்து சேர்கிறார் கார்த்தி. இந்த கடத்தலுக்கு அவர் பேசும் விலை பத்து லட்சம். கடத்தப்பட்ட இடத்தில் கார்த்தி மீது அனுஷ்காவுக்கு லவ் வர, அப்படியும் விடாதல் கொண்டுபோய் வில்லன்களிடம் ஒப்படைக்க போகிறார் கார்த்தி. போகிற வழியில் தன் நியாயத்தையும், மருந்தால் பாதிக்கப்படப் போகும் மக்களின் உயிர் பற்றியும் அனுஷ்கா சொல்ல, வில்லன்களை பகைத்துக் கொண்டும் உதைத்துக் கொண்டும் அனுஷ்காவை முதல்வரிடம் ஒப்படைக்கிறார் கார்த்தி.

முதல் பாதியில் குத்துப்பாடல்களை கவனித்துக் கொள்கிறார்கள் சந்தானத்தின் தங்கைகளாக நடித்திருக்கும் சனுஜா, நிகிதா, அகன்க்ஷா பூரி மூவரும். பின்பாதியில்தான் அனுஷ்கா வருகிறார். ஒரு காட்டு பங்களாவில் ஒரே ஒரு டிரஸ்சுடன் இவரை தங்க வைக்கும் கார்த்தி, போட்டுக் கொள்ள தனது மேல் சட்டையை கொடுக்க, குளிரில் அனுஷ்காவும் வெப்பத்தில் ரசிகர்களும் தவித்துப் போகிறார்கள். இங்கும் ஒரு குத்துப்பாட்டுக்கு உத்தரவாதம் இருக்கிறது.

மனோபாலா, லொள்ளு மனோகர் என்று பகுதி நேரத்தில் வரும் காமெடியன்களும் கூட, பச்சை பச்சையாக பேசி சிரிக்க வைக்கிறார்கள்.

மெலடியை விட குத்துப்பாட்டுக்கே அதிக இம்பார்ட்டன்ஸ் என்பதால் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஆர்மோனியம் ஆடாத ஆட்டம் போட்டிருக்கிறது. பாடல்கள் ரசிக்க தூண்டுபவைதான்.

சரவணனின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் பரபரக்கிறது.

சிவகுமார் பேமிலியிலிருந்து வந்திருக்கும் படம் என்பதால் நன்நம்பிக்கை முனையில் நின்று கொண்டு படம் பார்த்திருக்கிறது சென்சார். அவர்கள் கொடுத்திருக்கும் சர்டிபிகேட்டுக்கும் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆபாசத்திற்கும் சம்பந்தமேயில்லை.

Download Alex Pandian  MP3 Songs