Kutti Puli
Production :- S. Muruganandam & N. Puranna
Director :- M.Muthaiah
Music :- M Ghibran
Actors :- Sasikumar,Lakshmi Menon,Saranya Ponvannan, Rama Prabha

சதக் சதக் சசிகுமார் ஃபார்முலாவேதான்! கூடவே கொஞ்சம் புலியின் சீற்றத்தையும் சேர்த்து குட்டிப்புலியை வெட்டுப்புலியாக்கியிருக்கிறார் புதுமுக இயக்குனர் முத்தையா.

ஆறாக ஓடுகிற ரத்தத்தை இன்னும் அதிகப்படியாக காட்டியிருக்கீங்களே, அதுதான் ரொம்ப தப்பைய்யா... 

என்னோட நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன்தான் என்பது போன்ற அட்ராக்ஷன் ஃபார்முலாவை கையாண்ட சசிகுமாருக்கு அப்படியே பொருந்தி வருவது போல ஒரு கதை. கிராமபுற கோவில்களில் பேச்சியக்காவாகவும், அங்காளம்மாவாகவும் இருக்கிற எல்லை தெய்வங்கள்தான் இந்த படத்தில் வரும் சரண்யாவின் ரோல் மாடல். இவர்களுடைய பிளாஷ்பேக் என்னவாக இருந்திருக்கும்? இதை ஐம்பது தலைமுறைக்கும் முன்னால் போய் சிந்தித்திருக்கிறார் முத்தைய்யா. ஒவ்வொரு தெய்வமும் குறைந்தது பத்து கொலையாவது பண்ணியிருக்கலாம் என்ற முடிவுக்கும் வந்து அதற்காக ஒரு ஸ்கீரின் பிளேயை உருவாக்கியிருப்பதும் சற்று புதுமைதான். ரசிகர்களை சோதனைக்குள்ளாக்காமல் இந்த விஷயத்தை சொல்லியிருக்கிறாரா? பார்க்கலாம். 

செத்துப்போன அப்பாவை போலவே ஊருக்கு ஒரு பிரச்சனை என்றால் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிற சசிகுமாருக்கு திரும்புகிற இடத்திலெல்லாம் ஒரு எதிரி. போதாத குறைக்கு ஊரே மதிக்கிற ஒரு ரவுடியை பட்டப்பகலில் டவுனில் வைத்து வெளுத்து கட்டுகிறார். அவனை போட்டுத்தள்ளாம விட மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ரவுடி காத்திருக்க, அந்த நேரம் பார்த்துதானா காதல் பூக்க வேண்டும் சசிக்கு? முதலில் இந்த காதலை மறுக்கும் அவர் மெல்ல மெல்ல அதற்குள் விழ, கல்யாணமே வேணாம்னு நின்ற மகன் காதலிக்கிறானே என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார் சரண்யா.

மகனுக்கு யார் யாரெல்லாம் எதிரிகளோ, அவர்கள் வீடு தேடிப்போய் மகனுக்காக மன்னிப்பு கேட்கும் சரண்யா, அந்த பெரிய ரவுடி வீட்டுக்கு போக, அங்கே நடக்கும் அமளி துமளிதான் க்ளைமாக்ஸ். ஹீரோ செய்ய வேண்டிய வேலையை அவனது அம்மா செய்கிறாள். பெண் தெய்வம் பேச்சியக்காவுக்கு தேங்க்ஸ் கார்டு போட்டு படத்தை முடிக்கிறார் முத்தைய்யா. 

அழுக்கு லுங்கி, அசால்ட் லுக் என்று ரவுடிக் களை நன்றாகவே பொருந்துகிறது சசிகுமாருக்கு. காதலே வேண்டாம் என்று விலகிப் போனாலும் சந்தர்ப்பம் அதை வலுக்கட்டாயமாக அமைத்து தருகிற விஷயத்தை ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். யார் எதை கேட்டாலும் செய்துவிடுவாராம் புலி. அதற்காக நொள்ளை பசங்களின் லவ் லெட்டரையுமா கொண்டு போய் கொடுப்பார்? (நல்லா சுத்துறீங்கப்பா) காதல் காட்சிகளில் லேசாக வெட்கப்படும் இவரது முகம் ப்ளஸ்.

லட்சுமிமேனனுக்கு அலுங்காமல் குலுங்காமல் வந்துவிட்டு போகிற கேரக்டர். முகத்துல பாலீஷ் கொஞ்சம் குறைஞ்சு போச்சே, ஏனுங்க? அவ்வளவு நல்ல பொண்ணு அப்பாவுக்கே தெரியாமல் நகையை அடகு வைத்து சசிகுமாரை காப்பாற்றுவதெல்லாம் கப்சா கதையோட்டம். முதல் பாதியில் விறுவிறுவென நடைபோடும் திரைக்கதை இரண்டாம் பாதியில் தட்டுத்தடுமாறி நடப்பது துரதிருஷ்டம். 

ஒரு ஆத்தா போதாதென சரண்யாவோடு இன்னொரு ஆத்தாவை கோர்த்துவிட்டிருக்கிறார்கள். கடைசி காட்சியில் ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டு கோழி அறுப்பது போல வில்லனை அறுத்து முடிக்கையில் வேர்த்து விறுவிறுக்கிறது நமக்கு. திருப்பாச்சி அருவாளுக்கு அரசு தடை போட்டுவிட்டது. இனி ஆத்தாக்கள் அருவா கடை என்று எவராவது ஓப்பன் பண்ணினால் சேல்சுக்கு செம உத்திரவாதம்.  

சசிகுமாரின் கூட்டாளிகளாக நடித்திருக்கிற முகங்கள் நம்மை வெகுவாக கவர்க்கிறார்கள். அதுவும் பெரிய பிஸ்தாவாக தனக்கு தானே பந்தா செய்து கொள்ளும் அந்த மீசை பார்ட்டி அதிகம் கவர்கிறார்.

பின்னணி இசைக்கு தடுமாறுகிற நேரத்திலெல்லாம் இளையராஜாவின் பொற்கால பாடல்கள் கை கொடுக்கின்றன. ரைட்ஸ் கொடுத்து வாங்கினார்களா, அல்லது அப்படியே அடித்தார்களா தெரியாது. லஜ்ஜையே இல்லாமல் ராஜாவின் பாடல்களை பயன்படுத்துகிறார்கள். அப்புறம் எதற்கு தனி மியூசிக் டைரக்டர்? ஜிப்ரானின் சம்பளத்தில் பாதியை ராஜாவுக்கு அனுப்பினால் புண்ணியம். 

ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் என்று ஆக்ஷன் படத்திற்குரிய அத்தனை வித்தைகளையும் பிசிறில்லாமல் செய்திருக்கிறார்கள். 

குட்டிப்புலி பதினாறடி பாயாவிட்டாலும், இந்த அரைகுறை பாய்ச்சல் கவரத்தான் செய்கிறது.

Download Kutti Puli  MP3 Songs