Ambikapathi (Raanjhanaa in tamil)
Production :- Krishika Lulla
Director :- Aanand L. Rai
Music :- A. R. Rahman
Actors :- Dhanush,Sonam Kapoor,others

பள்ளி பருவ பால் ஈர்ப்பை பக்குவமான காதலாக காண்பித்து காண்போர் கண்களை பொய்யாக்கும் வித்தை தெரிந்த தனுஷின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு படைப்பு! காசி வாழ் பிராமினான தனுஷின் காதலுடன், அகில இந்திய மாணவ அரசியலையும் கலந்து இந்திப்பட ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட "அம்பிகாபதி", ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தனுஷின் தமிழ் ரசிகர்களுக்காக தமிழும் பேசி வெளிவந்திருக்கிறது!

கதைப்படி தனுஷ்க்கு காசி வீதிகளில் சிறுபிராயத்தில் ராமர், கிருஷ்ணர் வேடமணிந்து வீதி நாடகம் போட்ட காலத்திலிருந்தே அதே ஏரியாவில் வசிக்கும் இஸ்லாமிய சிறுமி சோனம் கபூர் மீது ஒரு வித ஈர்ப்பு. அதை பள்ளி நாட்களில் காதலமாக கருதி சோனம் பின் அலைகிறார் தனுஷ்! சோனம் கையால் பளார்  பளார்... என கன்னத்தில் ஒரு டஜன் அறைகளுக்கு மேல் தனுஷ் வாங்கிய பின்பு, அவர் மீது சோனத்திற்கும் ஒரு வித அன்பு ஏற்படுகிறது! விஷயம் சுற்றத்திற்கும், நட்பிற்கும் தெரிந்து சோனம் கபூரின் வீட்டிற்கும் தெரிய வந்து விபரீதமாகிறது. அதன் விளைவு சோனம், ஆக்ராவிற்கும் அதைத்தொடர்ந்து டில்லிக்கும் மேற்படிப்பு படிக்க அனுப்பப்படுகிறார். தனுஷ் தன் படிப்பை பாதியில் நிறுத்தி சோனத்தின் வீட்டிற்கு தான் யார்? எனக் காட்டிக்கொள்ளாமல் எடுபிடியாக எல்லா உதவிகளும் செய்கிறார். கூடவே சோனம் கபூரின் வருகைக்காக காதலுடன் காத்திருக்கிறார். எட்டு வருடங்கள் உருண்டோடுகிறது. சோனம் திரும்பி வருகிறார். தனுஷை, தன் கல்லூரி காதல் கைகூடிட உதவிட வேண்டுகிறார். தனுஷ், சோனம் விரும்பும் அவரது டில்லி கல்லூரி புரட்சி மாணவருடன் அம்மணியை சேர்த்து வைத்தாரா...? அல்லது அவர்களது காதலுக்கு தீயை வைத்தாரா? என்பதுடன் மாணவர் அரசியல் ஓட்டுக்காக கையேந்தும் இந்திய அரசியல்வாதிகளின் நரித்தனங்கள், காசி-கங்கையின் அழகுகள்.. என இன்னும் பலவற்றை கலந்துகட்டி வித்தியாசமும், விறுவிறுப்புமான காதல் படம் தர முனைந்திருக்கிறார் இந்திப்பட இயக்குனர் ஆனந்த் எல்.ராய்! அதில் இயக்குனர் ஆனந்த் எல்.ராயைக்காட்டிலும் கதாநாயகராக நடித்திருக்கும் தனுஷ் பெரும் வெற்றி பெற்றிருப்பது படத்தின் பலம்!

தனுஷ் மீசை இல்லா பள்ளி மாணவராகவும், மீசை, தாடியுடன் கூடிய அசாத்திய துணிச்சல் கொண்ட இளைஞராகவும் இருவேறு பரிமாணங்களில் வழக்கத்திற்குமாறாக மிரட்டலாக நடித்து இருக்கிறார். தன் இளம் பிராய இஸ்லாமிய காதலியின் டில்லி கல்லூரி காதலனும் இந்து தான் என்று தெரிய வந்ததும், அதேநாளில் தன் முறைப்பெண்ணுடன் நடக்க இருந்த தன் திருமணம் தடைப்பட்டு போவது பற்றிக்கூட கவலைப்படாமல், அவர்களது திருமணத்தை தடுத்த நிறுத்த ஓடும் குரூர தனுஷைக்காட்டிலும், சோனம் கபூரிடம் பள்ளி நாட்களில் கா‌தலை சொல்லப்போய் கன்னத்தில் அறை வாங்கி திரும்பும் மீசை கூட இல்லாத தனுஷ் பிரமாதம்! அதே நேரம் காதலியின் கல்லூரி புரட்சியாள காதலன் சாவுக்கு தான் காரணம் எனக் குற்றநெஞ்சு குறுகுறுக்க, அவர் விட்டு சென்ற பணிகளை அவர்களது நண்பர்களின் உதவியுடன் டில்லி சென்று செய்வது நம்பமுடியாத ஹம்பக் என்றாலும் லாஜிக் பார்க்காமல் ரசிக்க முடிவது இயக்குனர் ஆனந்த்.எல்.ராய்க்கும், தனுஷூக்கும் கிடைக்கும் வெற்றி! ஆனாலும் க்ளைமாக்ஸில் தனுஷின் பரிதாப முடிவு உச் கொட்ட வைத்துவிடுகிறது!

சோனம் கபூர், இந்தி நடிகர் அனில் கபூரின் வாரிசாம், 16 அடி பாய்ந்திருக்கிறார். இன்பாட்சுவேஷனுக்கும், லவ்வுக்கு இடை‌யில் உள்ள வேறுபாட்டை இவர் புரிந்து கொண்ட அளவுக்கு தனுஷ் புரிந்து கொள்ளாததை இவர் புரிந்து கொள்ளாமல், தன் கல்லூரி காதலனின் சாவுக்கு தனுஷ் தான் காரணம் என்று அவரை டில்லி அரசியல் பிணந்திண்ணிகளுடன் சேர்ந்து கொண்டு பலிகடா ஆக்குவது வேதனை.

தனுஷ், சோனம் மாதிரியே தனுஷின் காசி நண்பன், தனுஷின் முறைப்பெண், சோனத்தின் டில்லி காதலன், அவனது சகோதரி என எல்லோரும் வட இந்திய முகங்கள் என்றாலும் திறம்பட நடித்திருக்கும் சிறப்பான முகங்கள், சரியான சவாலான பாத்திரங்கள்!

"கங்கை நீராலோ, கண்ணீராலோ உன் பாவத்தை கழுவ முடியாது... போய் பொழைப்பாரு" உள்ளிட்ட ஜான் மகேந்திரனின் (விஜய் நடித்த சச்சின் பட இயக்குனர்) பளிச் - பன்ச் வசனங்கள், வைரமுத்துவின் வைரபாடல் வரிகள், ஏ.ஆர்.ரஹ்மானின் புரிந்தும் புரியாததுமான புதிரான இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், ஆனந்த் எல்.ராயின் இயக்கத்தில், ஒரு சில லாஜிக்-மிஸ்டேக் குறைகள் இருப்பினும்"அம்பிகாபதி" - தனுஷின் கேரியரில் "அமராவதி - வற்றாத ஜீவநதி!!"

Download Ambikapathi (Raanjhanaa in tamil)   MP3 Songs